கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பெந்தோட்டை பிரதேச சபை மற்றும் கம்பளை நகர சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
பெந்தோட்டை பிரதேச சபை
தெற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று கூடிய பெந்தோட்டை பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அதிகாரத்தைப் பெற்றது. 23 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் தவிசாளர் பதவிக்கு திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பிரேமகுமார் விஜேவர்தன் 12 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதே வேளையில், தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மெர்வின் பிரதீப் கொடித்துவக்கு 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
கம்பளை நகர சபை
கம்பளை நகர சபையிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இங்கு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு திறந்த தேர்தல் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர் 10 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இருக வீரரத்ன 19 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குச்சவெளி பிரதேச சபை
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் பதவி இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) வேட்பாளர் ஐ. முபாரக்கிற்கு சென்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) ஆதரவுடன் அவர் வெற்றிப் பெற்றார்.
திறந்த வாக்கெடுப்பில், அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC) வேட்பாளர் அப்துல் ரிஸானை எதிர்த்து போட்டியிட்டார்.
பண்டாரகம பிரதேச சபை
பண்டாரகம பிரதேச சபை 24.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மேல் மாகாண சபை ஆணையாளர் செல்வி சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் கூடியது. இதன்போது தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பா அல்லது திறந்த வாக்கெடுப்பா என்பது தொடர்பாக உள்ளூராட்சி ஆணையருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி (UPFA) தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனால் பதற்றமான சூழல் நிலவியது. உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். பின்னர் சபை மீண்டும் கூடிய போதும், தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.