இஸ்மதுல் றஹுமான்
ஒரு கோடி 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருள், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் "பிங்க் குளுட்டா கொலெஜன்" ( Pink Gluta Collagen )
மற்றும் “வைட்டமின் சி” மாத்திரைகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து “கிரீன் செனல்” வழியாக கடத்த முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திங்கட்கிழமை அதிகாலை 12.20 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து எயர் ஆசியா விமான சேவையின் எம்.டீ.-140 இலக்க விமான மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளை பரிசீலனை செய்த வேளையில் அங்கு 1 கிலோகிராம் 632
“குஷ்” போதைப் பொருள், 2,160 பாக்கெட் “கொலெஜன்” மற்றும் 6,390 “வைட்டமின் சி” மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த “கொலாஜன்” மற்றும் “வைட்டமின் சி” மாத்திரைகள் நாட்டிற்குள் எடுத்துவர சுகாதார அமைச்சின் மற்றும் இலங்கை மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொரளையைச் சேர்ந்த 27 வயது முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றயவர் மருதானையைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர் ஆவர்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொருள் தொகை தொடர்பான மேலதிக விசாரணைக்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட “கொலெஜன்” மற்றும் “வைட்டமின் சி” தொகை தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.










