ஐக்கிய தேசியக் கட்சி தனது அமைப்பின் பலத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்து, புதிய டிஜிட்டல் யுகத்திற்குள் நுழையும் விசேட டிஜிட்டல் அங்குரார்ப்பண நிகழ்வு, 2026 பிப்ரவரி 04ஆம் திகதி கட்சியின் தலைமையகமான ‘சிறிகொத்த’வில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் போது, இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், ‘டிஜிட்டல் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள்’ (Digital Ward Coordinators) நியமனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் முதற்கட்டமாக, 1,000 வார்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு அன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் கட்சியின் கட்டமைப்புச் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனானதாகவும், வேகமானதாகவும் மற்றும் மக்களுக்கு நெருக்கமானதாகவும் மாற்ற எதிர்பார்ப்பதுடன், மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ‘UNP’ கைபேசி செயலி (UNP App) விரைவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த செயலியானது கட்சி உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய டிஜிட்டல் தளமாக அமையும்.
இந்த டிஜிட்டல் அங்குரார்ப்பணத்தின் மற்றுமொரு முக்கிய அங்கமாக, சிறிகொத்த தலைமையகத்தில் ‘Starlink’ அதிவேக இணைய வசதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.










