எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணம் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
சாரதியினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் வீதியை விட்டு விலகி பேருந்து பள்ளத்துக்குள் வீழ்ந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட கருத்துக்களாவன,
“எல்ல பகுதியில் விசேட விசாரணைகள் நடைபெற்ற வருகின்றன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.
பதுளை, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
25 வயதான ஒருவரே பேருந்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார். அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.