எதிர்காலத் தலைமுறையின் கல்விக் கண்களைத் திறக்கும் பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கானது என்று வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தினார்
வடமேல் மாகாணத்தில் 668 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு (07.06.2024) குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையில் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுனர் அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், வடமேல் மாகாணத்தின் கல்வித் துறை மேம்பாட்டிற்கான சகல முயற்சிகளையும் நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்த எங்களது கோரிக்கைகளை மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், முன்னுரிமை அளித்து பரிசீலித்து வருகின்றார். அதன் அடிப்படையில் இந்தநியமனங்கள் வழங்கப்படுகின்றது. எனினும் இந்த நியமனங்கள் வழங்கப்படுவதில் ஏராளம் சிக்கல்கள் மற்றும் தடங்கல்கள் என்பவற்றைக் கடந்து வரவேண்டியிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு இருந்த நிலை உங்களுக்குத் தெரிந்திருக்கும். எல்லாப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கல்வி நடவடிக்கைகள் முற்றாக சீர்குலைந்து போயிருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. அதனை மாற்றி நாட்டை இந்தளவுக்கு இயல்பு நிலைக்குக்கொண்டு வந்ததில் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய பங்கு உண்டு. அதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
மாகாணத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் எதிர்வரும் நாட்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளது. எம்மால் முடிந்தளவுக்கு அதிகூடிய ஆசிரியர் நியமனங்களை வழங்கி உள்ளோம். அதன் ஊடாக கல்வி மேம்பாட்டிற்கான செயற்பாடுகளை ஊக்குவித்துள்ளோம்
பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று ஒரு மாவட்டத்தில் கடமையாற்றும் வெளிமாகாண ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது ஏற்படும் வெற்றிடத்தை அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
அதே போன்று வடமேல் மாகாணத்தில் பணியாற்றும் வெ ளி மாகாணங்களைச்சேர்ந்த அனைவரையும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யவும், அதன் பின் ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமனம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
ஆகவே இன்று நியமனம் பெறும் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாகாணத்தின் கல்வி முன்னேற்றம், நம் எதிர்காலச் சந்ததியினரின் கல்விக் கண்களைத் திறக்கும் பாரிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது. அதனை அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் மாகாண சபையின் தவிசாளர் டிகிரி அதிகாரி, மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே. குணரத்தின, பிரதம அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம், ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், மாகாண கல்வி பணிப்பாளர் முதிதா ஜயதிலக, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/image-6-1024x682.png)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/image-7-1024x682.png)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/image-8-1024x682.png)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2024/06/image-5-1024x682.png)