இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு கல்வி, கலாச்சார, உதவி அமைப்பான "எக்கோ"(Education Culture Helper Organiziation) இம்முறையும் வசதி குறைந்த 1000 பாடசாலை மாணவர்களுக்கு 22 இலட்சம் ரூபா மதிப்புள்ள இலவசமாக அப்பியாச புத்தகங்களை வழங்குகின்றது. மேலும் அனர்தத்தில் பாதிக்கப்பட்ட 300 மாணவர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளனர்.
அடுத்த வருடம் முதலாம் ஆண்டு முதல் உயர் தரம் வரை கல்வி கற்கவுள்ள மாணவர்களுக்கே இவ் அப்பியாசப் புத்தக பொதிகள் வழங்கப்படுகின்றன.
அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் எம்.எம்.எம். றிழுவான், செயலாளர் எம்.எச்.எம். பாஸில் உட்பட அங்கத்தவர்கள் இதனை வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வின் போது எக்கோ தலைவர் றிழுவான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது 2020ல் ஆரம்பிக்கப்பட்ட எமது அமைப்பு நீர்கொழும்பு பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரதான நோக்கமாக பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிலையங்களுக்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களது கல்வி நடவடிக்கைகள் முடியும் வரை மாதந்தம் புலமைப்பரிசில் தொகையை வழங்கி வருகிறோம். இதன் அடிப்படையில் தற்போது 52 மாணவர்களுக்கு வழங்குகிறோம். அதில் 12 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளது எமக்கு மகிழ்ச்சியை தருகின்றன.
எமது ஊரைச் சேர்ந்த தனவந்தர்கள் எமக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பினாலே கடந்த ஐந்து வருடங்களாக புலமைபரிசில் தொகையை வழங்கி வருகிறோம். இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று எமது பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை முன்னேற்றுவதே எமது சகல அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
எமது எக்கோ அமைப்பை நிரந்தர வருமானமுள்ள அமைப்பாக உருவாக்குவதற்காக நம்பிக்கை நிதியமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
கல்வி முன்னேற்றத்திற்காக செயல் திட்டங்களை அமுல்படுத்திவரும் நாம் இம்முறையும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கிறோம். இம்முறை கடந்த வருடத்தை விட மும்மடங்காக ஆயிரம் மாணவர்களுக்கு இதனை வழங்குகிறோம்.
திடீரென ஏற்பட்ட பேர் அனர்தத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக மேலும் 300 பொதிகளை வழங்க தீர்மாணித்துள்ளோம்.
புத்திஜீவிகள் மற்றும் தனவந்தர்களின் உதவி ஒத்தாசையுடனும் எமது உறுப்பினர்களின் பொறுப்புனர்சியின் செயல்பட்டினாலும் எமது ஐந்து வருட பயணத்தின் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.










