ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
கொழும்பு – தெமட்டகொடை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையுடன் மத்திய கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை இணைந்து, ஆண்களுக்கு ஏற்பாடு செய்திருந்த “ஜனாஸா சட்டதிட்டங்களை தெளிவுபடுத்தும் மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு”, பேரவை மண்டபத்தில் (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதேவேளை, பெண்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு, ஏற்கனவே செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களின் பணிப்பாளர் நஸாரி காமில் ஆகியோரது வழிகாட்டலின் பேரில், வை.எம்.எம்.ஏ. மத்திய கொழும்பு கிளையின் சுகாதாரப் பணிப்பாளர் எம். இஸட். சித்தீக் தலைமையில் முன்னெடுக்கப்படும் இக்கருத்தரங்குகளை, ஜனாஸா சட்டதிட்டங்களைத் தெளிவுபடுத்தும் விரிவுரையாளர்களான மௌலவி ஏ. முனாப் (முஅய்யிதி) ஆண்களுக்கும், முஅல்லிமா பாத்திமா ஸப்ரா முனாப் பெண்களுக்கும், வெவ்வேறு வகுப்புக்களின் ஊடாக நெறிப்படுத்தி வருகின்றனர்.
மாதம் நான்கு முறை விடுமுறை தினங்களில், வயது வித்தியாசமின்றி இலவசமாக நடாத்தப்பட்டு வரும் இக் கருத்தரங்குகளின் மூலம், தமது சுய விருப்பங்களின் பேரில் விண்ணப்பித்து இதற்காக முன்வந்துள்ள 25 முதல் 35 வரையிலான ஆண்களும் பெண்களும் பயன் பெற்று வருகின்றனர்.
விரிவுரையாளர் மௌலவி முனாப் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, “ஜனாஸா விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளவோ, வெட்கப்படவோ வேண்டிய அவசியம் இல்லை. தற்காலத்தைப் பொறுத்த மட்டில், ஒரு வீட்டில் ஒருவராவது இருப்பது தான் சிறந்தது. எமது குடும்பத்தில் ஒரு ஜனாஸா ஏற்பட்டால், அதனை நாமே முன்னின்று செய்யும்போது, வீண் அலைச்சல்களிலிருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்துடன், அடுத்தவர் வரும் வரை, ஜனாஸாவை காத்திருக்கச் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படாது. இது எமக்கு நல்லதொரு வாய்ப்பாகும். இவ்வாறான மிகவும் பயன்மிக்க வழிகாட்டல் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதன்மூலம், நாமே எம்மைத் திருத்திக்கொள்பவர்களாகவும் ஆகிவிடுவோம். மேலும், இது எமக்கு நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சிறந்த செயலுமாகும். எனவே, சளைக்காமல் தொடர்ந்தும் தைரியத்துடன் இங்கு வந்து, ஜனாஸாவைக் குளிப்பாட்டல், கபன் துணி வெட்டல், கபனிடல் போன்ற செயற்பாடுகளைக் கற்று, பயனடைந்து கொள்ளுங்கள். இதற்காக நேரம் காலங்களை ஒதுக்கி, ஒழுங்கு செய்து தந்திருக்கும் வை.எம்.எம்.ஏ. உறுப்பினர்களையும் இத்தருணத்தில் நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாக உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/318d241d-f7f9-4b61-89f3-c3696dbec0f7-1024x682.jpg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/9acd13ed-6406-4011-af6d-ddbd2e475cff-1024x492.jpg)