- ஊடகவியலாளர் ரஸூல் தீன் ஸாஹிரா மாணவர்களுக்கு அறிவுரை
ஐ. ஏ. காதிர் கான்
ஊடகத்துறை என்பது, எமக்கு தந்திருக்கும் ஒரு சிறந்த பொக்கிஷம். அது கௌரவமான கண்ணியமான ஒரு துறையாகவும் சிறந்து விளங்குகின்றது. இத்துறையை நாம் பக்கச்சார்பின்றி நேர்மையாகவும் விசுவாசமாகவும் கடைப்பிடித்து வந்தால், அதன் மூலம் மக்கள் மேலான பயனை அடைந்து கொள்வார்கள். ஆகவே, செய்திகளை சேகரிக்கும்போதும், அதனை வெளியிடும்போதும் மிகவும் அவதானமாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, ஸாஹிராவின் பழைய மாணவரும், சவூதி அரேபியா “அரப் நியூஸ்” ஊடக மையத்தின் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செய்தியாளரும், “கொழும்பு டைம்ஸ்” பிரதம ஆசிரியருமான மொஹமட் ரஸூல் தீன், ஸாஹிரா மாணவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ‘எழுத்தாளர் அமைப்பி’னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எழுத்தாளர் தின’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் விஷேட உரை நிகழ்த்தினார்.
இச்சிறப்பு நிகழ்வு, ஸாஹிரா அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில், கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில், (17) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
எழுத்தாளர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த மூன்றுநாள் பயிற்சிப்பட்டறையின் நிறைவு நாளான இவ் ‘எழுத்தாளர் தின’ நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஸூல் தீன் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது,
ஊடகத்துறையை நாம் சரியான வழிகாட்டுதல்களோடு முறையாகப் பேணி நடந்து வந்தால், அதன் சுவையான பெறுபேறுகளை, எங்களால் உணர்ந்துகொள்ள முடியும். அந்த சுவையை இன்றும் நான் உணர்கிறேன்.
நான் 18 வயதிலேயே ஊடகத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். இன்றும் கூட அதன் நிழலிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இதேபோன்று, எனது வாழ்நாளின் இறுதிவரை, தொடர்ந்தும் ஊடகத்துறையிலேயே பயணிப்பேன்.
அன்று முதல் இன்று வரை என்னை வளர்த்ததும் ஊடகத்துறை தான். இதனால், ஊடகத்துறையை அளவு கடந்து நான் நேசிக்கின்றேன்.
ஊடகம் என்பது, நேர்மை நம்பிக்கை சகிப்புத்தன்மை என்பவற்றுக்குள் அடங்கியிருக்க வேண்டும். வெறுப்பேற்படுத்தும் விதத்திலான சொற்பிரயோகங்களுக்கு அதிலே இடம் வைக்கக் கூடாது. பொய் பரட்டுகள் இருக்கக்கூடாது. ஒருவரை நோவினை ஏற்படுத்தும் விதத்தில் ஒருபோதும் கைகளை நீட்டி பேசவும் கூடாது. இவ்வாறு பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் தான், அதை உண்மையான வலுவுள்ள ஒரு ஊடகமாகக் கருத முடியும். இவ்வாறான கொள்கைகளை நான் பின்பற்றி வருவதினால்தான், சிறு வயது முதல் இன்றும் இன்னும் ஊடகத்தில் நம்பிக்கையுடன் செயலாற்றி வருவதுடன் முன்னேறியும் வருகின்றேன்.
இதேபோன்று, ஸாஹிரா மாணவர்களும், எதிர்காலத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே, எனது அவாவும் ஆசையுமாகும். அந்த ஆசை நிறைவேறவும், எனது பிரார்த்தனைகளைப் புரிகின்றேன் என்றார்.
இச்சிறப்பு நிகழ்வில், கல்லூரி சார்பில் அதிபர் றிஸ்வி மரிக்கார், ஊடகவியலாளர் ரஸூல் தீனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி அதிபர் முஸ்தபா மஹ்ஸூர் நூல் அறிமுகத்தையும், எழுத்தாளர் அமைப்பின் பொறுப்பாசிரியை சஸ்னா அஸ்லம் வரவேற்புரையையும் நிகழ்த்தினர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் கற்கும் 31 மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் இந்நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் அதிபர் றிஸ்வி மரிக்கார், ஊடகவியலாளர் ரஸூல் தீன் ஆகியோர்களினால் வழங்கி வழங்கப்பட்டன. இதில் ‘விநோதக் கனவு’ நூலுக்கான சான்றிதழை மாணவன் மொஹமட் ரகீப் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளுள் சிறுகதைப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பொன்னான நிகழ்வில், பிரதி அதிபர்களான ஏ.எம். மிஹ்ளார், ஸீனத் இஸ்மாயீல், முன்னாள் பிரதி அதிபர் திருமதி ஹிஜாஸி மொஹிதீன், எழுத்தாளர் அமைப்பின் ஆலோசகர்களான றிஸ்கான் ஜௌபர், ஸிஹ்னாஸ் பதுர்தீன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.



