இஸ்மதுல் றஹுமான்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு சபைக்கும் 60 சத வீதமானவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சத வீதமானவர்கள் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
குறித்த சபைக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் ஆகக் கூடிய வாக்குகளை பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அதி கூடிய சம அளவு வாக்குகளை பெற்றிருந்தால் திருவுளச் சீட்டு மூலமே தீர்மானிக்கப்படும்.
தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிறைவடைந்ததும் ஒவ்வொரு வட்டாரங்களிலும் ஒரு நிலையத்தில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஒரு வட்டாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் நிலையங்கள் இருந்தால் அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரியினால் குறிக்கப்படும் வட்டாரத்தின் ஒரு நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படும். குறித்த வாக்கெண்ணும் நிலையத்திற்கு வட்டாரத்தின் ஏனைய வாக்களிக்கும் நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு ஒரே இடத்தில் எண்ணப்படும். குறித்த வட்டாரங்களுக்காக தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளும் முத்திரை இடப்பட்டு அந்த வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டு தனியாக எண்ணப்படும்.
குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் ஐம்பதை விட குறைவாக இருந்தால் அந்த வாக்குகள் வட்டாரத்தின் ஏனைய ஏதாவது ஒரு வாக்குப் பெட்டியுடன் கலக்கப்பட்டு ஒன்றாக எண்ணப்படும். இது யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு வாக்களிப்பின் இரகசியத்தை பேணும் முறையாகும்.
கூடுதலான வாக்குகளை பெற்று வட்டாரத்தில் வெற்றிபெற்றவர் அதே இடத்தில் வைத்து பகிரங்கப்படுத்தப்படுவார்.
இவ்வாறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து 60 சத வீதமான பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மீதமான 40 சத வீதமான பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்காக குறித்த சபைக்கு வட்டார அடிப்படையில் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகள் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையில் சபைக்கு போட்டியிட்ட கட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களை தீர்மானிக்கின்ற முடிவுகள் அட்டவணைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கு குறித்த சபையின் சகல வட்டாரங்களினதும் வாக்குகள் ஒன்று சேர்க்கப்பட்டு குறித்த உள்ளூர் அதிகார சபையில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில்
போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்ற வாக்குகள் பகிரங்கப்படுத்தப்படும்.
ஒரு சபைக்கு அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கையால் பிரிக்கப்படும். இக் இக்கணிப்பீட்டின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை விலை தொகை என அழைக்கப்படுவதோடு இது ஒரு அங்கத்தவரை பெறுவதற்கான எண்ணிக்கையாகும். ஒவ்வொரு கட்சியும் சுயேட்சை குழுவுப் பெற்ற மொத்த வாக்குகள் இந்த எண்ணிக்கையால் பிரிக்கப்படும் போது வரும் எண்ணிக்கை கட்சி பெற்ற உறுப்பினர்களின் தொகையாகும். இந்த கட்சிகள் பெற்ற உறுப்பினர்களின் தொகையை அந்த கட்சிகள் வட்டார அடிப்படையில் பெற்ற அங்கத்தவர்களின் தொகையால் கழித்தால் வரும் எண்ணிக்கையே அந்த கட்சிக்கு பட்டியல் மூலம் கிடைக்கப் பெறும் எண்ணிக்கையாகும்.
ஒவ்வொரு கட்சியும் சுயேச்சை குழுவும் ஓர் உள்ளூர் அதிகார சபைக்கான தேர்தலில் பெற்றுக் கொள்கின்ற ஆசனங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் சட்டத்தின்படி 25 சதவீத உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதால் அந்த வகையில் வட்டாரத்தில் வெற்றி பெற்றவர்கள் தவிர ஏனைய பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் வீதம் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விடயம் தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டு அந்தந்த கட்சிகளுக்கும் சுயேச்சை குழுக்களுக்கும் அறிவிக்கப்படும்.