ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்குக் கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக செல்வி சுமதுரிகா சஷிகலா பிரேமவர்தன நியமனத்திற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
அத்துடன், பிரேசில் கூட்டாட்சிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. சி.ஏ.சமிந்த இனோகா கொலன்னே நியமனத்திற்கும், மாலைதீவுக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மொஹமட் ரிஸ்வி ஹசனை நியமிப்பதற்கும், துருக்கிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக எல்.ஆர்.எம்.என்.பி.ஜீ.பீ கதுருகமுவவை நியமிப்பதற்கும், நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. றுவந்தி தெல்பிட்டியவை நியமிப்பதற்கும், தென்கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக மாரிமுத்து பத்மநாதனை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. அயேஷா ஜினசேனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான அமைச்சர்களான குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, (கலாநிதி) உபாலி பண்ணிலகே, சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.