இயேசு கிறிஸ்து தீமையை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, ஈஸ்டர் தாக்குதல் குறித்த நீதிக்கான அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை என்பது நம்பிக்கை, மீண்டெழுதல் மற்றும் சமூகமாகப் புதியதொரு தொடக்கத்தைக் குறிக்கும் புனிதமான தருணம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். 40 நாட்கள் நோன்பிருந்து மதச் சடங்குகளில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மக்கள், இயேசுவின் துன்பங்கள் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய உயிர்த்தெழுதலை இந்நாளில் கொண்டாடுவதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
புதிய நம்பிக்கைகளுடன் இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (2019 ஏப்ரல் 21) இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்களின் வலி இன்னும் இதயங்களில் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“அந்தப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இன்றுவரை நீதி வழங்க முன்னைய அரசாங்கத்தாலும் இன்றைய அரசாங்கத்தாலும் இயலவில்லை என்பது ஒரு நாடாக நாம் அடைந்த மாபெரும் தோல்வியாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதும், உண்மையை வெளிக்கொணருவதும் அரசியலமைப்பு ரீதியான இன்றியமையாத பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பேணுவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையை நிலைநாட்ட முடியும் என்றும், இந்த விடயத்தில் தனது ஆரம்பகால நிலைப்பாடு இன்றும் மாறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒருபோதும் இத்தகைய துயரம் நிகழாதவாறு வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைத்து இன, மத மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் நினைவுக்கு மரியாதை செலுத்தி, நீதி மற்றும் அமைதிக்காகத் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள இந்த ஈஸ்டர் நாளில் உறுதியேற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.









