இன்று ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர், ஈரானுக்கு எதிரான ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் அந்த தாக்குதல்களுக்கு ஈரான் அளித்த பதிலடி குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை மிக மோசமான நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார். அதேபோல், ஈரான் மீது தாக்குதல் நடத்திய நாடுகளுக்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட ஈரானையே குற்றம் சாட்டி ஒரு ஜிசிசி (GCC) நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பும் மோசமானதாகும். ஜிசிசி நாடுகள், தாங்கள் மிகுந்த நம்பிக்கை
வைத்துள்ள வல்லரசுகளால் எவ்வாறு கூட்டாகப் பாதிக்கப்படுகின்றன (collective victimisation) என்பதை மறந்து விட்டன; இதனால் தென் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம் சமூகங்கள் தொடர்ந்தும் துன்புறுகின்றன.
மேற்கு நாடுகள் இஸ்லாமோபோபியாவை (Islamophobia) எவ்வாறு முன்னெடுத்துள்ளன என்பது நன்றாக தெரிந்த விடயம். ஆனால் இஸ்லாமோபோபியா, அதன் நவீன தோற்றத்தில், பல நாடுகளில் ஏற்கனவே நிலவிய பெரும்பான்மை தேசியவாதத்தையும் அதன் இனவாதத் தாக்கத்தையும் இணைத்துக் கொண்டது. பல நாடுகளில் சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லிம்களுக்கு இந்த அனுபவம் புதிதல்ல. எனினும், பெரும்பாலும் உணரப்படாத உண்மை என்னவெனில் அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் நிலவிய பரஸ்பர சந்தேகம் மற்றும் நல்ல அண்டை உறவுகள் இல்லாமை போன்ற காரணிகளே பிற தேசங்களில் வாழும் முஸ்லிம் சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்க ஏதுவாக அமைந்திருந்தது. இதை விரைவில் உணர்ந்து, அரபு மற்றும் இஸ்லாமிய உலகம் பரவலான ஒற்றுமை அடிப்படையில் தம்மை ஒருங்கிணைத்துக் கொண்டால், அது முழு இஸ்லாமிய சமூகத்துக்கும் நல்லது.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் உளவுத்துறை அமைப்புகள் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது. U2I2 (UAE, USA, India, Israel) என்ற மூலோபாய பங்காளிகள் குழு இதில் முக்கியமானது. அதே போன்று பல்வேறு பாதுகாப்பு கூட்டமைப்புகளும் கூட உள்ளன. வளைகுடா அரபு நாடுகள் தவறான பாடத்தை கற்றுக் கொண்டு, மேற்கத்திய ஆயுத சந்தைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை “விளையாட்டு துப்பாக்கிகளை” வாங்குவதற்காக பில்லியன் கணக்கான எண்ணெய் பணத்தை செலவழிக்கின்றனர். எமிரேட்ஸ் நாட்டின் சிலருக்கு போர்ப் பயிற்சி அளிக்க இந்திய இராணுவ நிபுணர்களை அனுப்பத் திட்டம் உள்ளதாகவும் கிலாகிக்கப்படுகிறது.
தற்போதய சூழலில், ஈரான் பின்வரும் சாத்தியக் கூறுகளை எதிர்நோக்கியுள்ளதை காணலாம்.
- ஈரான் தான் எதிர்கொண்டிருக்கும் ஆபத்தை உணர்ந்து, தளர்ந்து விடுமானால், அது ஆட்சி மாற்றமாக (regime change) முடியலாம்.
- அது இராணுரீதியில் பதிலளிக்காமல் இருந்தால், விரும்பியோ விரும்பாமலோ அது கட்டுப்படுத்தப்பட்ட (containment) நிலையை அடையலாம்.
- அது தனது இராணுவ பதிலடியை தொடர்ந்தும் முன்னெடுக்குமானால்,, மூலோபாய கூட்டாண்மைகள் (strategic partnerships) மற்றும் கூட்டு பாதுகாப்பு உதவி தேவைப்படும்.
- அது தனிப்பட்ட முறையில் போராடத் தீர்மானித்தால், அது தேசிய உயிர்வாழ்வின் கேள்வியாகும் (national survival). எனினும், தன்னை தற்காத்துக் கொள்ளலாம்.
உண்மை என்னவெனில் ஈரானியர்கள் பெரும் சவால்களுக்கிடையே நம்பிக்கையுடன் நிலைத்திருக்க பழகியவர்கள். பல நூற்றாண்டுகளாக அவர்கள் எதிர்கொண்ட வெளிநாட்டு படையெடுப்புக்கள், அவர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மேலும் எழுச்சி பெறவே செய்துள்ளன. இது ஒரு நேர்மறையான குறிப்பு; இருந்தாலும் சவால்கள் இன்னும்.உள்ளன.
ஜிசிசி நாடுகள் எடுத்துள்ள நிலைப்பாட்டின் சாரம், ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் பதிலடி அல்ல, தூண்டுதல் அல்லது சண்டைக்கிழுத்தல் (provocative actions) எனும் கருத்தாகும். ஆனால், ஒரு நாடு தனது நிலத்தில் மற்றொரு நாட்டின் இராணுவத் தளத்தை அனுமதித்து, மூன்றாவது நாட்டுக்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களை நடத்த அனுமதிப்பது, போரில் அந்த நாடு உடந்தையாக. உள்ளது அல்லது மறைமுகமாக ஒத்துழைக்கிறது (complicity) எனக்கருதப்படும். உடந்தை என்பது மறுவிதத்தில் பகைமையின் வெளிப்பாடு (hostility) என்றே அர்த்தபப்படும். அப்படியானால், உண்மையில் தூண்டுதல் அல்லது சண்டைக்கிழுத்தல் என்பது எது? மூன்றாவது நாட்டுக்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களை அனுமதிப்பதா, அல்லது அந்த மூன்றாவது நாடு அந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதா? இது மிகவும் முக்கியமான கேள்வி.
சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம், ஒரு குறிப்பிட்ட ஜிசிசி நாடு, ஈரானின் பதிலடி தாக்குதல்களுக்கு உள்ளான பிற ஜிசிசி நாடுகளுக்கு பாதுகாப்பு உறுதியளித்துள்ளது (security assurance). இதை கூட்டுப் பாதுகாப்பு எனக் கூறலாம். ஆனால், அந்த நாடு இந்த உறுதியை நம்பத்தகுந்ததாக மாற்றுவது எப்படி என்பது கேள்வியாக உள்ளது, ஏனெனில் அவ்வாறு பாதுகாப்பு உறுதி வழங்கிய நாட்டுக்கே, ஈரானுக்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களை நடத்தியவர்களிடமிருந்து தான் பாதுகாப்பு உறுதியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
மேலும், ஒரு நெறிமுறை கேள்வியும் (moral question) உள்ளது. ஈரான் தலைவரின் கொலைக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காமல், அவர் ஒரு சுதந்திர, இறையாண்மையுள்ள நாட்டின் தலைவராக இருந்ததை புறக்கணிப்பது, மனச்சாட்சியின் சோதனை (test of conscience) அல்லவா? இது சர்வதேச சட்டத்தின் கேள்வியும் ஆகும்.
ஏ. எல். ஏ. அஸீஸ்









