மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளன. நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிப்பதற்கான தற்காப்புத் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என வளைகுடா நாடுகள் தமது கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன.
இந்தப் போர் பதற்றம் மற்றும் விமான ரத்துச் சம்பவங்கள் காரணமாகத் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்றும், அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









