இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் தனித்துவமான சந்தர்ப்பம்.
இதன் மூலம் இந்நாட்டிலுள்ள 04 இலட்சம் வர்த்தகர்கள் பயனடைவர்.
இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் “ தொலைநோக்கு அறிக்கை” தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி.
இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (12) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் இதில் இணைந்து கொண்டார்.
NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இந்த வர்த்தக நிலையங்ககளின் எண்ணிக்கை மார்ச் 2024க்குள் 65,000 ஆக உயர்த்தப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அண்மைய உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ” தொலைநோக்கு அறிக்கையின்” பிரகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த கொடுப்பனவு முறைமை (UPI) அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், LankaQR ஊடாக UPI பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ளுர் பரிவர்த்தனைகளுக்கு உகந்த முறையான LankaQR ஆனது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது. அதன்படி, UPI- கைபேசி செயலியைப் தடையின்றி பயன்படுத்தி இலங்கை முழுவதும் உள்ள வணிகர் சமூகத்திற்கு கொடுப்பனவுகளை செலுத்த முடியும். மேலும் இந்த ஏற்பாடு நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்தும்.
மேலும், இலங்கையில் உள்ள சுமார் 20 உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வேலைத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் மும்பையுடன் இலங்கை இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் இலங்கையில் உள்ள சுமார் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு மட்டுமன்றி இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் வெளியிட்ட ” தொலைநோக்கு அறிக்கையை” தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும், அண்மையில் பேர்த்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், தொலைநோக்கு அறிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும், மொரீஷியஸ் அரசுடனான ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மற்றும் மொரிஷியஸை UPI கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் இலக்கை அடைவது பரஸ்பர நன்மைகளைப் பெறுவதற்கும் உள்ளூர் பொருளாதாரங்களின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் ஒரு படியாகும் என்றார்.
ஆபிரிக்காவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Rupee அட்டையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வருகை தரும் மொரிஷியஸ் சுற்றுலாப் பயணிகளின் வசதியை அதிகரிப்பதிலும், பண நோட்டுகள் மற்றும் நாணயங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைப்பதிலும் அது வகிக்கும் பங்கை வலியுறுத்தினார்.
பூகோள தெற்கின் நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர், “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற கொள்கையின்படி, அண்டை நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இந்தியா ஆதரவளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த மூன்று நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.












