வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
“கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம் ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போதே இந்த திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கை தொழிலாளர்களுடைய இலங்கையில் இருக்கும் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை உறுதிப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
சம்பந்தப்பட்ட நபர் இலங்கையர் என்பது மாத்திரமே அளவுகோளாக கருத்திற்கொள்ளப்படுவதோடு குறித்த, புலமப்பரிசில் வழங்குவதற்கான பொருத்தமான வழிகாட்டுதல்கள் எதிர்வரும் தினங்களில் வெளியிடப்பட உள்ளன .
காட்டு யானைகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு இதேபோன்ற புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இதை மேலும் பல துறைகளுக்கும் விரிவுபடுத்த ஜனாதிபதி நிதியம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.