தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்து கொண்டார்.
இதன்போது, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டியதுடன் குறிப்பாக பௌத்த மதம் மூலம் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தை எடுத்துரைத்தார்.
தாய்லாந்து வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், இலங்கை தற்போது விவசாயம், கைத்தொழிற்துறை மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட, இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து தாய்லாந்துத் தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் சபாநாயகருக்கு விளக்கினார்.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) முழுமையாக செயல்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த தூதுவர், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகள் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
கலாச்சார பரிமாற்றம், சுற்றுலா மேம்பாடு, வர்த்தக பங்களிப்பு மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

July 23, 2025
0 Comment
7 Views