அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் 10.11.2025 இடம்பெற்றது.
இதன்போது சந்தேகநபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
வழக்கினை ஆராய்ந்த நீதவான் அவர்களில் 26 மீனவர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் இரண்டு படகு ஓட்டிகளுக்கும் ஒரு படகின் உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராதத்தையும் செலுத்துமாறும் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.










