பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையின் நிலைமையும் அவ்வாறுதான் இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 28.06.2024 நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொருளாதார வலுவற்ற ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை இலங்கையின் வௌியுறவுக் கொள்கையில் உள்வாங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், காலநிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பிலான பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை தற்போது சர்வதேச சமூகத்திற்குள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பணியை அற்றியுள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் வருடம்தோறும் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ஊடக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திட்டமிடல் நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த 124 பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்க விருதுகளை வழங்கிவைத்ததோடு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் வெணுர பெர்னாண்டோ மற்றும் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோரால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டார்.