எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உருவாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களைப் போன்று முதலீடுகளை வலுவிழக்கச் செய்யும் நிலைமை ஏற்பட மீண்டும் இடமளிக்கப்படாது என்றும், முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான, நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி, மேம்படுத்துவதையும், இரு நாடுகளும் பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதையும் நோக்காகக் கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப பிரதமரும் அவரது குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்