இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள் இலட்சிய பயணத்துக்கான அடித்தளமாக அமைந்துள்ளதென, வடமேல் மாகாண ஆளுநரும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது,
அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்த குடும்பத்தின் தியாகங்களைப் புலப்படுத்துவதே, ஹஜ்ஜின் நோக்கமாகும். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர், மத்திய கிழக்கில் இறைதூதர் இப்றாஹீம் செய்த தியாகங்கள் மற்றும் முன்னெடுத்த திடகாத்திரங்களே முழு உலகுக்கும் நாகரீகத்தை அறிமுகஞ் செய்துள்ளது. இதனால்தான், “இப்றாஹிமின் தியாகத்தை முழு சமூகத்துக்கும் மார்க்கமாக்கியுள்ளோம்” என, புனித குர்ஆன் கூறுகிறது. அன்னாரின் முன்மாதிரிகள் உலகம் உள்ளவரைக்கும் நிலைக்கும். இந்த தத்துவம் இறைவனின் இந்த வாக்கியத்தில் பொதிந்துள்ளது.
பலஸ்தீனத்திலும் மக்காவிலும் இறைதூதர் இப்றாஹிமின் குடும்பத்தினர் புரிந்த மிகப்பெரிய தியாகங்களில் பல படிப்பினைகள் உள்ளன. இறைவனின் ஏவல்களுக்கு முற்றிலும் அடிபணிந்த இறைதூதர் இப்றாஹிம், அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்துக்கு அடித்தளமிட்டார். இவரது வாயிலாகவே எமக்கு இன்று இஸ்லாம் மார்க்கமாக கிடைத்துள்ளது.
இப்றாஹிம் (அலை) அவர்களின் வாழ்வில், ஷெய்த்தானுக்கு துளியளவும் இடமிருந்ததில்லை. இதுபோலவே, அவரது குடும்பத்தினரும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டனர். நவீன உலகில் நம்மை எதிர்கொள்ளும் சோதனைகள், கஷ்டங்கள் நீங்குவதற்கு இறைவனை நெருங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. மனிதனை புனிதனாக புடம்போடுவதற்கு ஹஜ் கிரியைகள் பயிற்சியளிக்கின்றன. அன்னை ஹாஜறாவின் பொறுமை பெண்களுக்கும் தந்தை இப்றாஹிமின் (அலை) திடகாத்திரம் ஆண்களிடமும் இருப்பதும் அவசியம்.
சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போடப்படும் சதிகள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டிய காலமிது. நிதானம், பொறுமை மற்றும் பக்குவங்களாலேயே இவற்றை தோற்கடிக்க முடியும். தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்ற அடைமொழிகளுக்குள் முஸ்லிம்களை முடக்க சிலர் சதி செய்கின்றனர். இந்த சதிகளுக்கு இரையாகமல் நடப்பதே நமக்குள்ள பாதுகாப்பு.
ஆகையால், ஹஜ் கால கிரியைகளை மிக நிதானமாக முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.