வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களால் 23.07.2025 புதன்கிழமை சான்றுரைப்படுத்தப்பட்டன.
இந்தச் சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நேற்று (22) நடைபெற்றதுடன். விவாதத்தைத் தொடர்ந்து இவை நிறைவேற்றப்பட்டன.
இந்த மூன்று சட்டமூலங்களும் 03.06.2025 ஆம் திகதி முதலாவது வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கமைய, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) 2025ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமாகவும், வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) 2025ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமாகவும், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வரும்.
2025ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக வேலையாட்களின் வரவுசெலவு நிவாரணப்படி 2025 மார்ச் 31ஆம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டு 2025 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
அத்துடன், 2025ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக 2025 மார்ச் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி வழங்கல் நிறுத்தப்பட்டு, 2025 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. அதேநேரம், 2025ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டத்தின் மூலம் ஏற்படும் மாற்றங்கள்:
01) 2025 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் : தேசிய குறைந்தபட்ச வேதனம் ரூ. 27,000 (ரூ. 9.500 இனால் அதிகரிப்பு)
தேசிய குறைந்தபட்ச நாளாந்த வேதனம் ரூ. 1,080 (ரூ. 380 இனால் அதிகரிப்பு)
02) ஜனவரி 1, 2026 முதல்: தேசிய குறைந்தபட்ச வேதனம் ரூ. 30,000 (ரூ. 3,000 இனால் அதிகரிப்பு)
தேசிய குறைந்தபட்ச நாளாந்த வேதனம் ரூ. 1,200 (ரூ. 120 இனால் அதிகரிப்பு)
அத்துடன், வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் 2025 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்ததாகக் கருதப்படும்.