இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03.01.2026) நாளையும் இரவில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை அதிகாலை 4.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வடகிழக்கு திசை வானத்தில் இந்த விண்கல் மழை தென்படவுள்ளது.
மணிக்கு சுமார் 80 விண்கற்கள் தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையத்தின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் சந்தன ஜயரத்ன,
“2026 புத்தாண்டில் வானியல் ரீதியாகப் பல முக்கிய நிகழ்வுகள் உள்ளன. ஜனவரி மாதம் விசேடமானது. தற்போது ‘சுப்பர் மூன்’ (Supermoon) பற்றிப் பலர் பேசுகிறோம். அதற்கு மேலதிகமாக ஜனவரி 3, 4 சனி, ஞாயிறு தினங்களில் இரவு வானத்தைப் பார்த்தால் பிரதான விண்கல் மழைகளில் ஒன்றை நாம் காண முடியும்.
பொதுவாக நன்றாகப் பார்ப்பதென்றால் அதிகாலை 4, 5, 6 மணி போன்ற வேளைகளில், குறிப்பாக 4 இற்கும் 5 இற்கும் இடையில் வடகிழக்குத் திசையில் இவை தென்படும். மணிக்கு சுமார் 80 விண்கற்களை நாம் எதிர்பார்க்கிறோம். இது வால்வெள்ளியிலிருந்து உருவானதல்ல, சிறுகோள்களிலிருந்து (Asteroid) வந்த பகுதிகளாகவே கருதப்படுகிறது.”
“அடுத்து ஜனவரி 3 ஆம் திகதிக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. உண்மையில் இவ்வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள் மாத்திரமல்ல உள்ளன. பொதுவாக மாதத்திற்கு ஒன்றுதானே வரும். இம்முறை 13 பௌர்ணமி தினங்கள் உள்ளன. மே மாதத்தில் இரண்டு உள்ளன. இந்த ஜனவரி மாதத்தில் ஒரு பௌர்ணமி உள்ளது. அந்த பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட அதிக பிரகாசமாகத் தெரியும். அதனால்தான் பலர் இதனை ‘சுப்பர் மூன்’ என்கிறார்கள். பொதுவாகத் தெரிவதை விட 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமாகவும் இது தெரியும்.”
“பழகிய ஒருவருக்கே இதனை அவதானிக்க முடியும். சந்திரன் உதிக்கும்போதே இதைப் பார்ப்பது மிகவும் நல்லது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருகிறது. 3 ஆம் திகதி, பிற்பகல் இலங்கை நேரப்படி 3.32 மணியளவில் இது நிகழும். எனவே அந்த மிக நெருங்கிய சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால், அப்போது சந்திரன் சற்று பெரிதாகத் தெரியும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி சுமார் 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் நீள்வட்டப் பாதையில் பயணிக்கிறது. இந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும் சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால் அப்போது சுப்பர் மூன் தென்படுகிறது,” என்றார்.










