இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்துக்கான 10,000 வீடுகளைக் கொண்ட பாரத் – லங்கா வீட்டுத்திட்டம் 19.02.2024 ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக 1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் ஒரே தடவையில் இடம்பெறவுள்ளது.
இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா,கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 பெருந்தோட்டங்களில் இன்றைய தினம் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதான நிகழ்வு 19.02.2024 காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.