ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்.பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தகம் நடைபெறப் போகிறது என அமெரிக்கா கூறிவந்தது. இப்போது அந்த இரு நாடுகள் மீதும் 500 சதவிகிதம் வரை வரி விதிக்க புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது.
ரஷ்யாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்கா இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் மசகு எண்ணெய்யை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து கிரஹாம் கூறுகையில், “ரஷ்யாவிடமிருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும். இந்தியா வும், சீனாவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடமிருந்து 70 சதவிகிதம் அளவுக்கு மசகு எண்ணெய்யை வாங்குகின்றன” என்றார்.
ரஷ்யாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, சமீபத்திய ஆண்டுகளாக ரஷ்யாவிடமிருந்து கிட்டத்தட்ட 49 பில்லியன் யூரோ வரை மசகு எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது.
குடியரசுக் கட்சியின் எம்.பி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி ரிச்சர்ட் புளூமெண்ட் ஆகியோரால் முன்மொழியப்பட்டு வழங்கப்பட்ட இந்த மசோதாவுக்கு 84 பேர் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.