ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்களான இலங்கையர்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஐந்து தெரிவு செய்யப்பட்ட பணிமனைகளில் பயணியல் ஓட்டுநர்களுக்கான ஓய்வு வசதிகளை அமைப்பதற்காக 60 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து இந்த ஐந்து பணிமனைகளைத் தெரிவு செய்தன.
இந்த நன்கொடை குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாட்டின் நலனுக்காக வழங்கப்பட்ட இந்தப் பங்களிப்புக்கு அரசு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
என்பிபி யுகே கிளையின் பிரதிநிதி தர்ஷன ஹெட்டியாரச்சி, நேற்று காலை (15) பத்தரமுல்லையில் உள்ள போக்குவரத்து அமைச்சில் 60 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை அமைச்சரிடம் கையளித்தார்.
“ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் இந்த தாராளமான முயற்சி, வெளிநாடுகளில் வாழும் மற்ற இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என நம்புகிறோம்,” என அமைச்சர் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.