பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கைபேசியொன்றை கொள்வனவு செய்யும்போது அது தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமென அந்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் (நுகர்வோர் முறைபாடு, விழிப்புணர்வு வழங்கல்) மேனகா பத்திரண தெரிவித்துள்ளாா்.
ஊடக அறிவிப்பொன்றை வெளியிட்டே அவர் இதனை குறிப்பிட்டுள்ளாா்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கைபேசியொன்றை கொள்வனவு செய்யும்போது அது தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதாக அல்லது அங்கீகாரம் பெற்றதாக இருக்கவேண்டும். அவ்வாறு கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருக்கும் கைபேசியின் IMEI இலக்கம் அல்லது சர்வதேச கைபேசி நிலைய உபகரண அடையாள எண் அதன் மேற்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த இலக்கத்தை பயன்படுத்தி, உங்களின் கைகளிலிருக்கும் வேறு ஏதாவதொரு கைபேசியை பயன்படுத்தி IMEI என்று டைப் செய்து, இடைவெளி விட்டு 15 இலக்கங்களை கொண்ட குறித்த கைபேசியின் IMEI இலக்கத்தையும் டைப் செய்து 1909 என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.
அதனூடாக, குறுஞ்செய்தி அனுப்பிய சந்தர்ப்பத்திலேயே உடனடியாக குறித்த கைபேசி தொலைதெடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் அனுமதிப்பெற்றுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள முடியும். எனவே, தொலைதொடர்புகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கைபேசியையே கொள்வனவு செய்ய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி விரும்புகிறோம்.
கைபேசி பயன்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.