நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி புதிய திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட 2023 மார்ச் 03 ஆம் திகதியிடப்பட்ட JSC/SEC/ClR/2023 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரு வருட காலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் விஷ வகைகள், அபின் மற்றும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை “இணைப்பு – ஆ” இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்திற்கு ஏற்ப தயாரித்து, ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையிடம் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நீதிச் சேவை ஆணைக்குழுவின் கட்டளைக்கு இணங்க அமுல்படுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









