அரச துறையைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜுலை 10ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட ஏழு இலட்சத்து எட்டாயிரத்து இருநூற்று முப்பத்தொரு (708,231) ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவை 09.07.2024 வங்கிகளுக்கு ஒப்படைத்துள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் தெரிவித்தார்.
அதன்படி, 24 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் தபால் திணைக்களத்திற்கும் 28.5 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதன் மூலம் 99.5 வீதமான மக்கள் ஜுலை 10 ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவை தாமதமின்றி பெற்றுக் கொள்வார்கள் எனவும், ஜுலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பிரதேச செயலகங்கள் தமது கடமைகளை நிறைவேற்றாததால் மிகக் குறைந்த எண்ணிக்கையான சுமார் 13,000 பேர் மாத்திரம் ஜூலை 11 ஆம் திகதி தமது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வார்கள் என்றும் ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.