விடத்தல்தீவு வனத்தின் ஒரு பகுதியை இறால் பண்ணைத் திட்டத்திற்கு ஒதுக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மன்னார், விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் எனக் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முடிவிற்கு வருவதாகக் கடந்த மே மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியிருந்தது. இறால் வளர்ப்பு தொழிற்பூங்காவை அமைப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராகச் சூழல் நீதிக்கான நிலையம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.