மதிப்பிற்குரிய இலங்கை வாழ் குடிமக்களுக்கும், ஊடகத்துறையில் கூடியிருக்கும் பெண்கள், ஆண்களுக்கும் மற்றும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கும்,
இன்று நாங்கள் அனைவரும் துயரமான இதயங்களுடன் உங்கள் முன், இலங்கை முழுவதையும் உலுக்கிய சம்பவம் தொடர்பாக எடுத்துரைப்பதற்கு ஒன்றுகூடியுள்ளோம்.. அநுராதபுரத்தில் பணியாற்றும் பெண்வைத்தியருக்கு, இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவச்சிப்பாயால் கத்தி முனையில் இழைக்கப்பட்ட உடல்ரீதியான வன்புணர்வு என்பது, ஒரு தனிமனிதன் மீதான வன்முறையல்ல, மாறாக இது இலங்கையில் வாழுகின்ற ஒட்டு மொத்தப்பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கை மீது இழைக்கப்பட்ட குற்றச்செயலாகும். இந்தக்கொடுரமான வன்செயல் பெண்கள் நலிந்த நிலையில் உள்ளார்கள் என்பதை எழுத்துரைக்கின்றது. அத்துடன் இது சாதாரணபெண்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையை ஏனையவர்களின் உயிர்களைக்காப்பாற்ற தங்களை அர்ப்பணித்த வைத்தியமாது மீதும் நடந்தேறியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
தங்களது மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே! பெண்களாகிய நாங்கள் வலிமையான மற்றும் உடனடியான மேன்முறையீட்டை தங்களுக்கு முன்வைக்கின்றோம். இந்தப் பாரதூரமான குற்றச்செயலைப் புரிந்த கொடும்பாவி சட்டத்தின்கீழ் மிகவும் கொடுரமான முறையிலும், உடனடியாகவும், கடுமையாகவும் எவ்வித தண்டிக்கப்படவேண்டும். இந்தச்சம்பவத்திற்கான நீதி காலதாமதமின்றியும், எதுவித இணக்கப்பாடுகளுமின்றியும் வழங்கப்படவேண்டும். இது ஒரு சம்பவம் தொடர்பானதல்ல, மாறாக இதன் முலம் ஒரு தெளிவான கருத்து முன்வைக்கப்படவேண்டும். அதாவது இலங்கையில் இவ்விதமான பாரதூரமான செயல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எவ்விதத்திலும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதாகும். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் நீதி முதன்மைப்படுத்தப்படவேண்டும். சட்டநடைமுறைகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், மற்றும் இனிவரும் காலங்களில் ஒரு பெண், அது வைத்தியராக இருக்கலாம், மாணவராக இருக்கலாம். ஒரு தாயாக இருக்கலாம் அல்லது ஒரு நிபுணத்துவம் வாய்ந்த பெண்ணாக இருக்கலாம். இவர்கள் யாவருமே தங்களது பாதுகாப்புக் குறித்து இனி ஒருபோதும் கவலை கொள்ளக் கூடாது.
இதில் ஆறாத்துயரமாக அமைவது மார்ச்மாதம் உலகளாவிய ரீதியில் அனைத்துப் பெண்களையும் மேன்மைப்படுத்தவும் பாராட்டவும் அவர்களது சேவைகளுக்காக நன்றியைச் செலுத்தவும் என்பதுடன், மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஸ்டிக்கப்பட்டும் வருகின்றது.
சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு இருதினங்கள் கடந்த நிலையில் இந்த நெஞ்சை
உலுக்கும் சம்பவம் நடைபெற்றது மிகுந்த வேதனையளிக்கின்றது. மேலும் இந்நிகழ்வு மார்ச் மாதத்தின் கொண்டாட்டங்களில் ஒரு காரிருளைப் படரச்செய்துள்ளது.. நாடளாவியரீதியில் பெண்களின் மனதில் கடும்கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மார்ச் மாதத்தில் மட்டுமல்ல மாறாக அவர்களது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் மதிக்கப்படவும் கொண்டாடப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டியவர்கள். இந்த
துயரகரமான சம்பவம், பெண்களாகிய நாங்கள், சமஉரிமைக்காகவும் நீதிக்காகவும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேணடியள்ளதென்பதை உணர்த்துகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம், இந்தச்
குற்றச்செயலில் ஈடுபட்டநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகாலங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை உற்று நோக்குகின்றபோது காணக்கூடியது யாதெனில் இவ்வாறாக இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்கள் சமுகங்களில் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்களில் பெரும்பங்கினை வகிக்கின்றனர். இந்த இழிவான செயல்கள் ஆயுதம் தாங்கி பாதுகாப்பில் ஈடுபடுகின்றவர்களின் பொறுப்புடைமையையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகின்றது. இந்நிலையில் அப்பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் தனிநபர்கள் இவ்வாறான கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும்போது இலங்கையில் வாழ்கின்ற மக்கள் எவ்வாறு பாதுகாப்புத்துறையின் மீது நம்பிக்கை கொள்ளமுடியும்? இலங்கை அரசாங்கம்
இந்தத்தப்பியோடிய இராணுத்தினர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றச்செயல்கள் நடைபெறுவதை முற்றாகத் தவிர்க்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
மேலும், மருத்துவத்துறையில் பணிபுரிகின்ற ஊழியர்கள் தங்களது எதிர்பை வெளிப்படுத்தும்முகமாக வேலைஇடைநிறுத்தம் மேற்கொண்டிருப்பது கவலையளிக்கின்ற விடயமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியருக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளுவதற்காக வேலை இடைநிறுத்தம் மேற்கொள்ளுவது மருத்துவ ஊழியர்களின் திண்மை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றது.
எனினும் சாதாரண ஒருதனிமனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் மருத்துவ சேவையென்பது இன்றியமையாத ஒன்றாகும். இப்புனிதமான மருத்துவசேவை இலங்கையில் வாழுகின்ற அனைத்துக் குடிமக்களுக்கும் அத்தியாவசியமானது. எனவே அதனைக்கருத்திற்கொண்டு அனைத்து மருத்துவ ஊழியர்களும் தங்களது பணிஇடைநிறுத்தத்தைக்கைவிட்டு மீளவும் சேவையில் இணையுமாறு
கேட்டுக்கொள்ளுகின்றோம். மருத்துவ ஊழியர்கள் மட்டுமல்லாது, ஏனைய தொழிந்துறைகளைச் சார்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இலங்கைவாழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மீளவும் தங்கள் சேவையைத் தொடர ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.
ஒரு கொடும்பாவியினால் இழைக்கப்பட்ட அநீதிக்காக ஏனைய குடிமக்களின் வாழ்வில் சிரமத்தை ஏற்படுத்துவது எவ்விதத்திலும் பொருத்தமான ஒன்றாகக் கருதப்படமாட்டாதென்பது எங்களின் தாழ்மையான கருத்தாகும்.
இறுதியாக, இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுவது யாதெனில், நீதி விரைவானதாகவும், கண்களுக்கு புலப்படக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்கள் மற்றும் அனைத்து உலகமக்கள் இந்த விடயத்தினை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர். எனவே எமது நாடு பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக மிகவும் கடுமையாக எதிர்க்குரலை எழுப்புகின்றதென்பதை எடுத்துரைப்போம். எந்தவொரு பெண்ணுக்குமுரிய நீதி மறுக்கப்படாமல், தாமதமாக்கப்படாமல் கிடைக்கவேண்டுமென்பதை வலியுறுத்துகின்றோம்.
மேலும் எமது பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பதை குறித்து மிகவும் கர்வம் கொள்ளுகின்றோம்.
இலங்கை அரசாங்கத்திடமும், எமது பெண்பிரதமரிடமும் நாம் கேட்டுக்கொள்வது யாதெனில் இச்சம்பவத்திற்கான உடனடி நீதி, மற்றும் அனைத்துப் பெண்களுக்குமான பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படவேண்டுமென்பமையும், மிகமுக்கியமாக இவ்வாறான சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறக் கூடாதென்பதையும் வலியுத்தி நிற்கின்றோம்.
Mannar District Women Network – MDWN
Mannar Social and Economical Development Organization – MSEDO










