அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில் பயணிப்பவர்கள் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பாக சலுகை காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விபத்துக்கு அமைவான முடிவை மீறும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆசப்பட்டி அணிவது தொடர்பில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, இவ்வாறு தனது கருத்தை வௌியிட்டார்.
“ஆசனப்பட்டி அணிவது மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில் இது விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என்று எங்களிடம் தரவுகள் உள்ளன.
அதனால்தான் நாங்கள் இரண்டு மாதங்களாக விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இந்த கட்டத்தில், அனைத்து வாகனங்களின் சாரதிகளும் இலங்கை முழுவதும் பயணம் செய்தால் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
மேலும், இலங்கை முழுவதும் வாகனத்தில் பயணம் செய்தால் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
இருப்பினும், செப்டம்பர் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
நாங்கள் இதை நேரடியாக மேற்பார்வையிடுகிறோம். சில நேரங்களில், சில வாகன உற்பத்தியாளர்கள் ஆசனப்பட்டிகளை வழங்காத சந்தர்ப்பங்கள் உள்ளன, மேலும் அந்த வாகனங்களில் ஆசனப்பட்டிகளை நிறுவ 03 மாத கால அவகாசம் அளித்துள்ளோம்.
அதைத் தவிர, மற்ற அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் பயணிகள் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயமாகும். அதை நாங்கள் நேரடியாக மேற்பார்வையிடுகிறோம்.” என்றார்.
இதற்கிடையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான அமைச்சர் ஆலோசனைக் குழுவில் பேசிய அமைச்சர், “க்ளின் சிறிவங்கா” திட்டத்தின் முக்கிய அங்கமாக இது செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
அதன்படி, குறித்த முடிவு செப்டம்பர் 1 முதல் அமுலுக்கு வரும்.
அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை பேருந்துகள், அலுவலக சேவை போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் பிற பேருந்துகளுக்கும் ஆசனப்பட்டிகளை பொருத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ரூ. சுமார் 2000 ரூபாய் செலவாகும் சீட் பெல்ட்களின் விலை தற்போது ரூ. 5000 முதல் 7000 வரை அதிகரித்துள்ளது என்றும், நுகர்வோர் விவகார ஆணைக்குழு இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட தூர சேவை பேருந்துகளில் ஆசனப்பட்டி அணிவதை எதிர்காலத்தில் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேவையான சட்ட திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் போது வாகனத்தின் நிலையை சரிபார்க்கும் முறையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாகனங்களின் சக்கரங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலை மற்றும் தரத்தில் இல்லாவிட்டால், அத்தகைய வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதி வழங்கப்படாது என்று அமைச்சர் அமைச்சின் ஆலோசனைக் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.