கொழும்பு – புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்கள் 17.04.2024 அதிகாலை நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் அகற்றப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு, லொத்தர் சீட்டு விற்பனைக்காக இந்த விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டன.
எவ்வாறாயினும், விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்ததால், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்க, லொத்தர் சீட்டுக்கு மேலதிகமாக ஏனைய பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த விற்பனை நிலையங்களை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தனவிடம் எமது செய்திச் சேவை வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், மிதக்கும் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையங்களால் பயணிகள் நடைபாதையில் செல்வதற்கு சிரமப்படுவதைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த விற்பனை நிலையங்களை அகற்றியுள்ளனர்.
எனினும் அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள இந்த வர்த்தக நிலையங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்பட்டமையானது நியாயமற்ற செயல் என அங்கு விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.