பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் விடுவிக்கப்பட்டுள்ள தொகை 4109.20 மில்லியன் ரூபாவாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் மலைநாட்டு எழுச்சி பத்தாண்டு பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10.000 மில்லியன் ரூபாவாகும். களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, குருநாகல், அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்த அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
முதல் காலாண்டில் 09 மாவட்டங்களுக்கு இத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இம்மாதத்தில் இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மலைநாட்டு எழுச்சி பத்தாண்டுத் திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான திட்டங்கள் செயற்படுத்தப்பட உள்ளன. அந்த திட்டங்களின் எண்ணிக்கை 2,545 ஆகும். கண்டி மாவட்டத்தில் 2,214 வேலைத்திட்டங்களும் மாத்தளை மாவட்டத்தில் 647 வேலைத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. நுவரெலியாவில் 554 திட்டங்களும் காலியில் 505 திட்டங்களும் மாத்தறையில் 1,403 திட்டங்களும் குருநாகலில் 515 திட்டங்களும் இரத்தினபுரியில் 1,813 திட்டங்களும் பதுளை மாவட்டத்தில் 305 திட்டங்களும் உள்ளன. இது தவிர, களுத்துறை, கண்டி, அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 163 சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மலைநாட்டு எழுச்சி பத்தாண்டு 10 வழி ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்ட ஒதுக்கீடுகள் வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் எனவும், இத்திட்டங்களை ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.