விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் ஆயிஷா – வயது 22 எனவும், காணாமல்போன ஆண் தில்ஷாத் – வயது 28 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஹாரிய, ஜயவர்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியினரே, இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்குச் சென்ற போது, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள “மோல் கல்” என்ற இடத்திற்கு இவர்கள் இருவரும் இன்று (15) திங்கட்கிழமை நண்பகல் நீராடச் சென்றுள்ளனர். இதன்போதே, இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன நபரைத் தேடும் நடவடிக்கைகளைப் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )