ஏப்ரல் 12 ஆம் திகதி பொது விடுமுறையாக இருந்தாலும், அன்றைய தினம் தபால் ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்ற இணங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனை வரலாற்றில் பாரிய அளவிலான பொருட்களை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
”அஞ்சல் துறைக்கும், மத்திய தபால் பரிவர்த்தனைக்கும் வரலாற்றில் அதிக அளவில் பொருட்கள் கிடைத்த ஆண்டு இந்த ஆண்டு. வெளி நாடுகளில் உள்ளவர்கள் நம் நாட்டில் உள்ள உறவினர்களுக்கு அதிக அளவில் பொருட்களை பொதிகளாக அனுப்பியுள்ளனர். அந்த பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு அனுப்புவது நமது பொறுப்பு. வருடத்தில் வரும் நீண்ட விடுமுறை நாட்கள் என்பதால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தபால்மா அதிபரின் அறிவுரைப்படி அனைவரும் வரும் 12 ஆம் திகதி பணியில் ஈடுபடுவார்கள். இதற்கு சுங்கம் அதிகாரிகளும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்” என தெரிவித்தார்.