பெருநாள் கொண்டாடுவது உலகில் எல்லாச் சமுதாயங்களிடமும் காணப்படும் பண்பாடாகும். கடந்த காலங்களை நினைவு கூர்ந்தோ விஷேச பருவகாலங்களை முன்னிட்டோ மக்கள் பெருநாட்களும் திருநாட்களும் கொண்டாடுவதை காணலாம்.
ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் இருநாட்களைப் பெருநாட்களாகக் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒன்று புனித ரமளான் மாதத்தின் நிறைவை முன்னிட்டுக் கொண்டாடும் நோன்புப் பெருநாள், மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்)அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு வந்தபோது மக்கள் இருநாட்களைப் பெருநாட்களாய்க் கொண்டாடுவதைக் கண்டார்கள். அப்பொழுது சொன்னார்கள்: இரு நாட்கள் உங்களுக்குத் திருநாட்களாய் இருந்து வந்துள்ளன.
அதில் நீங்கள் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது அவ்விரு நாட்களுக்குப் பகரமாக அவற்றினும் சிறந்த இருநாட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கி யுள்ளான். அவைதான் நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும்! (நூல் : அபூ தாவூத், நஸாஈ)
வணக்க வழிபாட்டில் மட்டுமல்ல., வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதுதான் இஸ்லாம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அந்தவகையில் பெருநாளை முன்னிட்டு குர்ஆன் – ஹதீஸின் வழிகாட்டல் என்ன என்பதைப் பார்ப்போம்.
‘தக்பீர்’ சூரியன் மறைந்து பெருநாள் இரவு தொடங்கியதிலிருந்து பெருநாள் தொழுகை வரையில் தக்பீர் சொல்ல வேண்டும்.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
(நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை) நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும் – அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக அவனது மேன்மையை நீங்கள் போற்றுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது) (2:185)
பள்ளிவாசலில் மட்டுமல்ல கடைவீதிகளிலும் வீடுகளிலும் குரலுயர்த்தி தக்பீர் முழங்கிட வேண்டும். இதன் நோக்கம், இஸ்லாத்தின் வணக்க வழிபாட்டின் சிறப்பைப் பிரகடனப்படுத்துவதும் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது பெருமையைப் பறைசாற்றுவதும் அவனுக்கு நன்றி செலுத்துவதுமாகும்! பெருநாள் தொழுகையை மைதானத்தில் நிறைவேற்றுவதே நபிவழியாகும்.
ஸகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை, பெருநாள் பகல் – இரவு செலனீனங்கள்போக பணம் மீதமுள்ள அனைத்து முஸ்லிகளும் வழங்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதன் நோக்கம், நோன்புக் காலங்களில் வீணான சொல் – செயல்கள் ஏதேனும் நிகழ்ந்திருந்தால் அவற்றிலிருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்துவதாகும். ஏயைஎளிய மக்களுக்கு உணவளித்து அவர்களின் பசியைப் போக்கி இந்தாளில் எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதும் இதன் உயரிய நோக்கங்களில் ஒன்றாகும். பெருநாள் அன்று தொழுகைக்கு முன்னர் இந்தத் தர்மம் வழங்கிட வேண்டும். அதற்கு ஓரிரு நாட்கள் முன்பே வழங்கினாலும் கூடும்.
குளிப்பது, நறுமணம் பூசுவது என்பனபெருநாள் அன்று மேற்கொள்ளப்படும் நபிவழிமுறைகளாகும். – ஸாயிப் பின் யஸீத், ஸயீத் பின் ஜுபைர் (ரலி) இருவரிடமிருந்தும் ஆதாரபூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநாள் அன்று மூன்று காரியங்களை மேற்கொள்வது நபிவழியாகும். 1) குளிப்பது 2) தொழுகைக்குப் போகும் முன்பு உண்பது 3) தொழுகைக்கு நடந்து செல்வது.
அழகிய ஆடைகளை அணிவதும் ஒரு முக்கிய சுன்னாவாகும்.
ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஜுப்பா இருந்தது அதனை – இரு பெருநாட்களிலும் ஜும்ஆ நாளிலும் அணிவார்கள். (நூல்: இப்னு ஹுஸைமா)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் பெருநாள் அன்று மிகவும் அழகிய ஆடையைத் தேர்வு செய்து அணிவார்கள்,, – இது ஆண்களுக்குத்தானே தவிர பெண்களுக்கு அல்ல. பெண்கள் அலங்காரத்தைத் தவிர்த்திட வேண்டும். ஏனெனில் உடலையும் ஆடை அலங்காரத்தையும் மறைத்துக் கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
இதேபோல அந்நிய ஆடவர்களைக் கவர்ந்திடும் வகையில் நறுமணம் பூசுவதும் அவர்களின் முன்னர் தோற்றம் அளிப்பதும் பெண்களுக்கு விலக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வணக்க வழிபாட்டிற்காகப் புறப்பட்டிருப்பது உண்மையெனில் அல்லாஹ் – ரசூலின் கட்டளையைப் பேணுவது கடமையாகும்.
தொழுகைக்குச் செல்லும் முன்பு பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பது நபிவழியாகும்.’தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு நடந்தே செல்வது அவசியம். தேவை இருப்பின் வாகனத்தைப் பயன்படுத்தலாம். – வீட்டில் இருந்து வெளிக்கிளம்பியது முதல் தொழுகையை நிறைவேற்றும் வரை தக்பீர் சொல்லிட வேண்டும் என்பதை மறந்துவிட கூடாது.
‘பெருநாள் தொழுகை வாஜிப் எனும் கடமையானதாகப் பாரக்கப்படுகின்றது. இப்னு தைமிய்யா (ரஹ்) போன்ற ஆய்வாளர்களின் கருத்து இதுவே ஆகும். தக்க காரணம் இருந்தால் மட்டுமே தவிர அதை விடுவதற்கு அனுமதி இல்லை. இதேபோல் தொழுகைக்குப் பிறகு நிகழ்த்தப்படும் உரையைச் செவிமடுப்பதும் அவசியமாகும்.
இந்த அசாதாரன சூழ்நிலையிலும் நோன்பு நோற்கவும் பெருநாள் கொண்டாடவும் அல்லாஹ் நமக்குப் பெரும்பாக்கியம் அருளியதற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வுடன் இருங்கள்.
அதற்கேற்ப உங்கள் செயல்களை அமைத்துக்கொள்ளுங்கள். நன்மைகள் – நற்காரியங்கள் ஆற்றுவதில் ஆர்வம் கொள்ளுங்கள். பந்த இணைப்பு உறவுகளைப் பேனல் போன்ற பயன்மிக்கச் செயல்களை மேற்கொள்வதற்கு இதுவே உகந்த காலம் என்பதை மறவாதீர்கள். பரஸ்பரம் கோபம், சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றை விட்டொழியுங்கள். இத்தகைய இழிகுணங்களிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப் படுத்துங்கள்.
இந்த உன்னத நாளில் ஏழை, எளியோர், அநாதைகள் ஆகியோர் மீது கருணை பொழியுங்கள். இந்தப் புனித ரமளான் நோன்புப் பெருநாளில் அவர்களின் வாழ்வில் மகிழ்வு பொங்கிட வழங்கி உதவுங்கள். துணைநில்லுங்கள், ஆயுள் முழுவதும் நலமுடன் வாழந்திட – இஸ்லாமிய உணர்வுடன் வாழ்ந்திட – வளம் அனைத்தும் பெற்றிட திடசங்கற்பம் பூணுவோமாக.