புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்கும் நோக்கில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளிலும், கடமையில் ஈடுபடுவதற்கு அனைத்து தபால் ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
கடந்த வருடம் புத்தாண்டுக் காலத்திலும் எரிபொருள் வரிசையில் நின்ற மக்கள் இந்த வருடம் ஆடை கடைகளிலும் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யவும் திரண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவதற்காக மேற்கொண்டு வரும் வெற்றிகரமான திட்டம் பலன் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 09.04.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இந்த புத்தாண்டுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வந்தடைந்துள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிக அளவில் பொருட்களை அனுப்பியுள்ளனர். புத்தாண்டு காலம் என்பதால் அந்த பொருட்களை துரிதமாக விநியோக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.
இதன் போது நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறையாக இருந்தாலும் அன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்க தபால் மா அதிபர் மற்றும் தபால் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். சுங்கத் திணைக்கள் அதிகாரிகளும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர். ஆனால் இம்முறை புத்தாண்டுக்குள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்காமல் ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் திரள்வதை காணமுடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் பலனாகவே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியின் சரியான வழிக்காட்டலின் கீழ் கிடைத்த வெற்றியின் பலனை மக்கள் அனுபவிக்கின்றனர்.
மேலும், புத்தாண்டுக் காலத்தில் உணவு பொருட்களின் விலை இரட்டிப்பாகி உள்ளதென பலரும் சாடினாலும், 2022/2023 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மை புரியும். எனவே நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், பணப்புழக்கம் சாராமல் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் டொலர்களுடன் வெளிநாட்டுக் கையிருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 பில்லியன் டொலர்களைக் கடந்துவிடும் என நம்புகிறோம்.
தற்போது தேர்தல் மனப்பான்மை எங்களிடம் இல்லை. தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர விரும்புகிறோம். சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முகம்கொடுக்க தயாராக இருக்கிறோம். தற்போது பொருளாதாரத்தை பலப்படுத்துவது குறித்தே கவனம் செலுத்துகிறோம்.