அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி, அஞ்சல் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அஞ்சல்மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையுடன் வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விநியோகப் பிரிவுகளைக் கொண்ட அஞ்சல் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் மூலம் வெளிநாட்டுப் பொதிகள் சேவை மற்றும் பொதுப்பொதிகள் விநியோகம் தொடர்பான விசேட சேவையொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.