நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட கட்டமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் 07.04.2024 நடைபெற்ற கண்டி சட்டத்தரணிகளுடனான சிநேகபூர்வ சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டமே இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான விரைவான தீர்வாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், அனைத்து துறைகளிலும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதிய சட்டக் கட்டமைப்பு கொண்டுவரப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, அந்த செயற்பாடுகளுக்கு சட்டத்துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.