நவீன விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அந்தப் பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, கோஷங்களிலும் வாதப் பிரதிவாதங்களிலும் மூழ்கி நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்தை மறந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
06.04.2024 பிற்பகல் நடைபெற்ற “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” அனுராதபுரம் மாவட்ட இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கூம்பிச்சாங்குளம் அருகில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் பலவற்றை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அவற்றில் பல பிரச்சினைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி, ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழுக்கு வாழ்க்கை தோல்வியடைய அனுமதிக்கப் போவதில்லை என்றும், கட்டியெழுப்பப்படும் இலங்கையில் எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு பல தொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று எதிர்காலத்தில் கல்விப்பொது சாதாரண தர சான்றிதழ் காரணமாக பதின்மூன்று வருட கல்வி நிறுத்தப்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து இளைஞர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்கி நாட்டிற்கு நிவாரணம் வழங்குவதுடன், பொருளாதார மறுசீரமைப்பு சட்டமும் இந்த மே மாதம் முன்வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை 2042ஆம் ஆண்டு வரை நீடிக்கவும், அந்தக் கடன்களில் ஒரு பகுதியை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்னேற்றுவதற்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரைவாக நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நவீன தொழில்நுட்பத்துடன் நாட்டின் இளைஞர்களை வலுவூட்டி நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்களான மனுஷ நாணாயக்கார, ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி கஸ்தூரி அனுராதநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.