அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 05.04.2024 இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
விஜயதாச ராஜபக்ஷவிடம் பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி பெற்ற கனிஷ்ட சட்டத்தரணிகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை அரசியலிலும் சட்டத்துறையிலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கும் விஜயதாச ராஜபக்ஷ, இலக்கியவாதி, எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞராக ஆற்றிய பணிகளுக்காக இதன்போது ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டார்.
1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த போது விஜயதாச ராஜபக்ஷவை சந்திக்கும் சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அவர் அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் திறமையான வேட்பாளராக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
நீதியமைச்சர் என்ற வகையில் தற்போது அவர் பல சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரின் எதிர்கால தொழில் பணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தனது 40 வருட சட்டத்தரணிப் பயணத்தை நினைவுகூர்ந்து இங்கு உரையாற்றிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, இவ்வாறானதொரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் உட்பட சட்டத்துறையினருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
40 வருடங்கள் கொழும்பு நீதித்துறை வளாகத்தில் சட்டத்தரணியாகவும், ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் அவர் பணியாற்றியுள்ளதுடன், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் ஒரு அரசியல்வாதியாக பாராளுமன்ற உறுப்பினராகவும் கோப் குழுத் தலைவராகவும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பல அமைச்சுகளில் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் சட்டத்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி கனிஷ்ட சட்டத்தரணிகளினால் நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், உள்ளிட்ட நீதிபதிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள் உட்பட சட்டத்தரணிகள் மற்றும் விஜயதாச ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உட்பட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.