கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) 04.04.2024 காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இரத்தினபுரியின் தெமுவாவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாணிக்கக்கல் கோபுரத்தை இரண்டு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 3650 இலட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் இரண்டாம் கட்டமாக 14 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 4500 இலட்சம் ரூபா செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் 27 வணிக வளாகங்களை உள்ளடக்கியதுடன், அதில் 17 வணிக வளாகங்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் 10 வணிக வளாகங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
தேசிய இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கூட்டுத்தாபனத்தின் நிதி இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இது வர்த்தகர்களையும் விற்பனையாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கும் ஒரு சர்வதேச இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக மையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்கள் மற்றும் ஆபரண விற்பனைக்கான ஆசியாவின் முன்னணி விற்பனை மையங்களான பெங்கொக் மற்றும் ஹாங்கொங்கில் உள்ளதைப் போன்ற சுயாதீன தர சோதனை சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் வங்கி மற்றும் ஏற்றுமதி சேவைகளும் இங்குள்ளது.
நினைவுப்படிகத்தைத் திரைநீக்கம் செய்து, சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு களவிஜயத்திலும் ஈடுபட்டார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்த அறிக்கையை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
04.04.2024 திறந்துவைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கற்களுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமதியை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மாற்ற முடியும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.