எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றாது சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினால் வாகன போக்குவரத்து குறித்த நிபுணத்துவ பதக்கம் வழங்கப்படும் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரயோக ரீதியான பரீட்சைக்கு மட்டும் தோற்றி சித்தி எய்துவதன் மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் மற்றம் பதக்கம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஆரம்பப் பிரிவு முதல் உயர்தர மாணவர்கள் வரையில் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வழங்கப்படும் போது ஆசிரியர்களும் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளை மேற்கெளர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதக்கம் வழங்கும் நடைமுறையின் அதி உச்ச கட்டமாக ஜனாதிபதி பதக்கம் வரையில் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு பதக்கம் பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியின் போது சலுகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.