நாட்டிற்கு உகந்த போட்டித்தன்மையுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆற்றிய சிறப்பான பங்கிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் 02.04.2024 இடம்பெற்ற முதலீட்டுச் சபையின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
முதலீட்டுச் சபையின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதன்முறையாக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதி செயல்திறனுக்கான பங்களிப்புக்காக முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு 30 விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். நீண்டகாலமாக செயற்பட்டு வரும் நிறுவனங்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டன.
மேலும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய விசேட பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்ட புதிய விருதுகள் பிரிவின் கீழ், பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஓமார் , மாஸ் ஹோல்டிங்ஸ் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தேசமான்ய மகேஷ் அமெலின் மற்றும் செயில் லங்கா யாத்ரா குழுமத்தின் தலைவர் பியரே பிரின்ஜன்ஸ் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விருது வழங்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு பியகம முதலீட்டு வலயம் திறந்துவைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தெற்காசிய பிராந்தியத்தில் விசேட பொருளாதார வலயங்களை நிறுவுவதில் இலங்கை முன்னோடியாக செயற்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கட்டுநாயக்கா மற்றும் பியகம போன்ற முதலீட்டு வலயங்களுக்கு பிரதான முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றிலும் வெற்றியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.