சீனப் பிரதமர் லீ கியாங்கிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே பெய்ஜிங்கில் 26.03.2024 சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீன பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு இரு நாட்டுத் தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நட்பு பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கு தயாராக உள்ளதாக சீன பிரதமர் லீ கியாங் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தவும், பொது வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், சீனா இலங்கையுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தேசிய ஒருமைப்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான பொருளாதார அபிவிருத்திக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கிறது.
பெல்ட் எண்ட் ரோட் கட்டமைப்பின் கீழ் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வர்த்தகம், விவசாயம் மற்றும் கடல் ஆராய்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் சீனா தயாராக உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிகமான நிறுவனங்களை சீனா ஊக்குவிப்பதுடன், இலங்கையின் தரமான பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும், சீன பிரதமர் லீ கியாங் தெரிவித்துள்ளார்.