தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபாய் பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் 25.03.2024 பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் 25.03.2024 பிற்பகல் 04.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை காற்று நுழையும் வகையிலான பெட்டிகளில் தவளை, மீன், குளவி, அணில், ஆமை, பல்லி, எலி, மற்றும் பிற வகை புழுக்கள் ஆகிய உயிரினங்களை அடைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பேங்கொக்கில் உள்ள விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது சுங்க அதிகாரிகளோ குறித்த உயிருள்ள விலங்குகளை அவதானிக்காதமை சிக்கலான விடயமென கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.