இனிவரும் காலங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என மருத்துவ சான்றளிக்கப்பட்டவர்கள் மட்டுமே கந்தக்காடு உட்பட ஏனைய புனர்வாழ்வு மையங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று புனர்வாழ்வு ஆணையாளரின் பணியகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் “யுக்திய” திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அண்மைய மாதங்களில் அரசால் நடத்தப்படும் கந்தக்காடு உட்பட புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த அனுமதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் போதுமான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் கூட புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது கடுமையான ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதுடன் மோதல்களைத் தூண்டியுள்ளது.
மேலும், இந்த மையங்களின் இராணுவப் பணியாளர்களுக்கு கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கந்தக்காடு மோதல்களுக்கு பெயர் போனது என்பதால், பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள் என்று மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் போதைப்பொருள் சார்ந்தவர்கள் அரச மருத்துவ அதிகாரியின் பரிசோதனையின் பின்னரே புனர்வாழ்வு மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.