ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 25.03.2024 வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரென அவர் தெரிவித்திருந்தார்.
அந்த கருத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக கைது செய்யுமாறு பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முறைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தன.
இந்த நிலையில், அவரை கைது செய்யுமாறு பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன.