உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச காச நோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி காச நோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த வருடம் “ஆம் எங்களால் காச நோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காச நோய் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதேவேளை, காச நோயினால் வவுனியாவில் கடந்த வருடம் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காச நோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெறும் அதிகளவான உயிரிழப்பிற்கு காரணமான மூன்றாவது நோயாக காச நோய் காணப்படுகிறது.
தொடர்ச்சியாக இரண்டு வாரங்களிற்கு மேற்பட்ட இருமல் மாலை நேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம் இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் இரத்தம் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது காச நோயாக கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்துகொள்வதன் மூலம் இந்த நோயினை கண்டறியமுடியும் எனவும் வவுனியா காச நோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்கு காச நோய் ஏற்பட்டால் ஆறு மாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்த முடியும்.
இந்த நோய் நிலைமை குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் வவுனியா காச நோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.