வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.
நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கிய ஜப்பானின் பயணத்திற்கும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய தூதுவர், ஜப்பான் மீள் எழுச்சி காலத்தில் வெளிப்படுத்திய ஈடுகொடுக்கும் இயலுமையை இலங்கை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
“ஜப்பானிடம் இருந்து இலங்கை கற்க வேண்டிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கல் பாடங்கள்” என்ற தலைப்பில் “Geopolitical Cartographer” சர்வதேச ஆராய்ச்சி அமைப்பினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (21) கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki மிசுகோஷி ஹிடேயாகி இதனைக் குறிப்பிட்டார்.
“ஜப்பானின் நவீனமயமாக்கல் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிர்வாகத்திற்கு கற்க வேண்டிய பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தூதுவர், ஜப்பானின் வரலாற்றில் கடந்து வந்த சவால்களுக்கு ஈடுகொடுத்து, நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்த அனுபவங்களை இதன்போது விவரித்தார்.
“Geopolitic Cartographer” என்பது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சி அமைப்பாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அதன் நிறுவனர் ஆவார்.
உலக அரசியல் ஒழுங்கை மறுவடிவமைக்கும் இந்து சமுத்திரம், பசுபிக் கடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்தியங்களில் புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார மற்றும் கடல்சார் வளர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை ஆய்வு செய்தல், மேம்படுத்துவதே “Geopolitical Cartographer” அமைபின் நோக்கமாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் சர்வதேச அளவில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவாலான சூழ்நிலையை தூதுவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.
உலகமே ஜப்பானுக்கு எதிராக நின்றபோது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் கூற்று காரணமாக, போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைவதற்கு வழியமைத்ததையும் தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை ஜப்பான் அந்நாட்டின் முன்னேற்றம் மற்றும் மீள் கட்டமைப்புக்காக பயன்படுத்திக் கொண்டதெனவும் கூறினார்.
அன்று தொடக்கம் இன்று வரையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவு காணப்படுவதோடு, அந்த நட்புறவை இருநாட்டு தலைவர்களும் மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜப்பான் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இலங்கை, ஜப்பானை முன்மாதிரியாக கொண்டு நாட்டில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பானை போன்று போட்டித் தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர், போட்டித் தன்மை நிறைந்த ஏற்றுமதி கைத்தொழில்களை உருவாக்குவதற்காக தொழில் கொள்கைகளை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் கீழ் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த மிசுகோஷி ஹிடேயாகி, அந்த முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் வேலைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முயற்சிகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உள்ளிட்ட நிறுவனங்களின் ஊடாக ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜப்பானின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையின் பின்னர், ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான எச். டி. திரு.கருணாரத்ன ஆகியோரி பங்குபற்றலுடன் அறிவியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலை கலாநிதி கணேசன் விக்னராஜா வழிநடத்தினார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, காவிந்த ஜயவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இராஜதந்திரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.